சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட மன்ற தலைவர், உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சீரணி அரங்கத்தின் அருகில் பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சீரணி அரங்கத்தையும் புதுப்பித்து புதிய கட்டிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அனைத்து தரப்பினருடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சீரணி அரங்கம் அருகே புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைவரிடம் அனுமதிக்கான கையொப்பம் பெறப்பட்டது.
இதையடுத்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் மன்ற பொருளாக வைக்கப்பட்டது. அதை பேரூராட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் சீரணி அரங்கம் பகுதியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டவும், அதன் கிழக்கு பகுதியில் சீரணிஅரங்கம் புதுப்பொலிவுடன் புதிய அரங்கமாக கட்டுவதற்கும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும் புதிதாக கட்டப்படும் பேரூராட்சி கட்டிடத்தின் அருகில் வணிக நோக்கத்தோடு எந்தவித கட்டிடங்களும் அமைக்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.