மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-02 20:50 GMT

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சியை ஏற்கும் விதமாக கடந்த 30-ந் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு அலங்காரம்

இதற்காக, கோவிலுக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.25 லட்சம் செலவில் சுமார் 10 டன் எடையில் பலவண்ணப் பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் பூக்கள் தவிர, வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட்,, கொடைக்கானல் கார்னேசன், ஜெர்புரா, கோல்டன்ராடு, ஆஸ்கரஸ் போன்ற பூக்களாலும் மேடை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வண்ண வண்ண பட்டுத்துணிகளும் மேடையை மேலும் மெருகூட்டின.

பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாணத்தை காண மேற்கு ஆடிவீதியில் 700 அடி நீளத்திலும், வடக்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திலும் பிரமாண்ட பந்தல்கள் போடப்பட்டிருந்தன. இதுதவிர பந்தலில் 350 டன் ஏ.சி. வசதியும் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் இருந்தும் திருக்கல்யாண காட்சியை காண 20 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலை முதலே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து குவிந்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் உள்பட எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதிக்கபடவில்லை. கோவிலுக்குள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கியதும் ஓதுவார்கள் தேவார பாடல்களை பாடினர். திருக்கல்யாணத்தை காண, தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய் பெருமாளும் வந்து எழுந்தருளினர்.

நேற்று அதிகாலையில் மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்கக்கவசம் அணிந்து, பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, முத்துக்கொண்டை, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார். சுந்தரேசப்பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை பச்சை பட்டும் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

மணமேடையில் எழுந்தருளல்

மீனாட்சி அம்மனும்-சுந்தரேசுவரரும் சித்திரை வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேசுவரர் காசியாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மனும்-சுவாமியும் கோவிலுக்குள் கன்னி ஊஞ்சல் ஆடினர்.

இதையடுத்து மேலக்கோபுர வாசலில் மாப்பிள்ளை சுந்தரேசப் பெருமானுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் மணமேடைக்கு வந்து எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் மேடைக்கு வந்தார். மணமகளின் இடதுபக்கம் பவளக்கனிவாய்ப் பெருமாளும், வலது புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் வீற்றிருந்தனர்.

திருமணச் சடங்குகள்

காலை 8.10 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமகள் மீனாட்சியாக விக்கிரபாண்டிய பட்டர் வகையறா பிரபு என்ற ஹரிஹர பிரபு பட்டரும், சுந்தரேசுவரராக குலசேகரபட்டர் வகையறா கார்த்திக் என்ற சோமசுந்தரகற்பூர பட்டரும் இருந்து திருமண சடங்குகளை நிறைவேற்றினர்.

மேடையின் முன்பு அக்கினி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

வைரக்கற்கள் பதித்த திருமாங்கல்யம்

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தாலியை சிவேஸ் பட்டர், ஹலாஸ் பட்டர்ஆகியோர் மூன்று முறை பக்தர்கள் முன்பு காட்டினார்கள். காலை 8.40 மணியளவில் தேவர்கள் வாழ்த்த, வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதசுரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தேறியது.

கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமி-அம்மனை வாழ்த்தி கோஷமிட்டு தரிசனம் செய்தார்கள்.

மங்கல நாண் மாற்றிய பெண்கள்

பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். அந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டார்கள். கோவிலுக்கு வெளியே எல்.இ.டி. திரைகளில் திருக்கல்யாணத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்களும் பக்தி பரவசம் அடைந்து, புதிய மங்கல நாண் மாற்றி்க்கொண்டனர்.

அதன்பின்பு சுந்தரேசுவரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனமும், தங்கச் செம்பில் பன்னீரும் கொண்டு வந்து தெளிக்கப்பட்டது. தங்கத்தட்டில் தீபாராதனை நடந்தது. மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்த்தனர்.

நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சுமார் 10 நிமிடம் மேடையில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானையும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர்.

பழைய திருக்கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார்கள்.

மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு கமிஷனர் குமரகுருபரன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மீனாட்சி அம்மன் கோவில் கமிஷனர் அருணாசலம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்று தேரோட்டம்

சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்குமேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருள்கிறார்கள். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது.

12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.

கள்ளழகர் புறப்பாடு

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.

வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகரை, மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுதினம் (5-ந் தேதி) அதிகாலையில், தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்