மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு
மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு
கோவை, பிப்.22-
கோவையில் மருத்துவ கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஐ.டி. பெண் ஊழியர் உள்பட2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 24). ஐ.டி. பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கவுசல்யா தனது உறவுக்கார பெண்ணை பழி வாங்க திட்டமிட்டார்.
இதையடுத்து உறவுக்கார பெண்ணின் நண்பரான தொண்டாமுத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (24) என்பவருடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பாலகிருஷ்ணனும் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். இதனிடையே கவுசல்யா, பாலகிருஷ்ணனிடம் தனது உறவுக்கார பெண்ணின் புகைப்படத்தை எடுத்து தனக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.
ஆபாசமாக சித்தரிப்பு
இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து கவுசல்யாவிற்கு சமூகவலைத்தளம் மூலம் அனுப்பி வைத்தார். அந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்ட கவுசல்யா அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யா, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.