ஊதிய உயர்வு கேட்டு மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மனு

ஊதிய உயர்வு கேட்டு மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-09-05 17:30 GMT

ஊதிய உயர்வு கேட்டு மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரணாம்பட்டு தாலுகா மேல்வழிதுணையாங்குப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் பூமணி (வயது 58) என்பவர் கொடுத்த மனுவில் நான் 20 ஆண்டுகளாக மேல்வழிதுணையாங்குப்பம் பஞ்சாயத்தில் துப்புர பணியாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு மாத ஊதியமாக ரூ.2,200 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு அரசாணையில் துப்புரவு பணியாளருக்கு ரூ.5,310 வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தெரிவித்தார். இதுகுறித்து பல்வேறு இடங்களில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஊதிய உயர்வு

மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு காலத்திற்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தை வங்கிகணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். மகப்பேறு கால சலுகை வழங்க வேண்டும். மலைப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு படி, மருத்துவ உபகரண பராமரிப்பு படி வழங்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முதியவர்

அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூரை சேர்ந்த மணி (65) என்பவர் அவர் இதுவரை அளித்த மனுக்களின் நகல்களை மேசையில் வைத்தார். இதைப்பார்த்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மணி கூறுகையில், ஒதியத்தூர் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து மனு அளிப்பதால் என்னை அதிகாரிகள் கைத்தட்டி சிரிக்கிறார்கள். எனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிகாரிகள் கைத்தட்டி சிரிக்கிறார்கள் என்று மணி கூறும்போது, எவ்வாறு சிரிக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் அவர் கூட்டத்தில் கைத்தட்டி சிரித்து காண்பித்தார்.

வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்த கிருபாகரன் என்பவர் அளித்துள்ள மனுவில், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் என்னிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக வட்டி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டார். அதற்கான வட்டி சில மாதங்கள் மட்டும் தந்தார். பின்னர் அவர் வட்டி தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் அவமரியாதையாக பேசுகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்குதல் போட்டியில் வெற்றி பெற்ற வேலூர் மாணவிகள் உதவி கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்