தூத்துக்குடியில் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
தூத்துக்குடியில் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு அனைத்து டிரைவர்களுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, டிரைவர்களாகிய உங்கள் உடல் நலம் நன்றாக இருந்தால்தான் சாலையில் வாகனங்களை நன்றாக இயக்க முடியும். வாகன விபத்தில் இறப்பு என்பது எந்தவித முன்விரோதமும்; காரணமும் இல்லாமல் கவனக்குறைவால் ஏற்படும் மரணம் ஆகும். இதனை முழுவதும் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மதித்தும் நிதானமாகவும் மிக கவனமாகவும் வாகனத்தை இயக்க வேண்டும். அதிவேகமாகவும், குடிபோதையிலும், செல்போன் பேசி கொண்டும் வாகனத்தை இயக்குவது கண்டிப்பாக இருக்க கூடாது என்று கூறினார்.
முகாமில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள் சுமார் 60 டிரைவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், தனபால், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வம்ன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.