மருத்துவ கல்வி கட்டணம்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தகவல்
தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
36 மருத்துவமனைகளில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 2008 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் 100% வெளிப்படையாக இந்தக் கலந்தாய்வு நடைபெற்றதே இதன் சிறப்பு அம்சம்.
கிராமப்புறங்களில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளில், அதாவது ஊட்டி, நாகப்பட்டினம், திருப்பூர் போன்ற வெளிப்பகுதிகளில் உள்ள இடங்களில் 100 சதவீதம் மருத்துவர்கள் பணியமர்த்த முடிந்தது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், பாதிப்பு குறைவாக இருந்த இடங்களில் இருந்து மருத்துவர்கள் அதிகமுள்ள இடங்களுக்கு பணி அமர்த்தப்பட்டனர். தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் அவர்களின் விருப்பமான பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த வருடம் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தை அரசின் கணக்கில் செலுத்தினால் போதும். அந்த செலுத்திய படிவத்தை எடுத்துக்கொண்டு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் புதிய திட்டம் இந்த ஆண்டு முதலே நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.