வேலூர் ஆப்காவில் பயிற்சி முடித்த ஜெயில் அதிகாரிகளுக்கு பதக்கம், சான்றிதழ்

வேலூர் ஆப்காவில் பயிற்சி முடித்த ஜெயில் அதிகாரிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-07-02 15:03 GMT

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் (ஆப்கா) 37-வது அணி ஜெயில் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா மற்றும் 38-வது அணி ஜெயில் அதிகாரிகளுக்கான பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், மூத்த வழக்கறிஞர் விஜயராகவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆப்கா பேராசிரியர் பியூலா இம்மானுவேல் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா கலந்துகொண்டு 37-வது அணி பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், 'இங்கு பயிற்சி முடித்த அனைத்து அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்ல வாழ்த்துகள். ஜெயிலில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து அதன் மூலம் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்' என்றார்.

37-வது அணியில் தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த 25 ஜெயில் அதிகாரிகளுக்கு 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது தொடங்கப்பட்ட 38-வது அணிக்கான பயிற்சியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 20 ஜெயில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஆப்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்