திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் மோட்டார் சைக்கிள் ஏற்றி கொலை

அன்னவாசல் அருகே பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடனை பிடிக்க முயன்ற போது மெக்கானிக் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-28 18:50 GMT

8 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராப்பூசலை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர், நேற்று மொபட்டில் ராப்பூசலில் இருந்து கீரனூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து திருநல்லூர் சேதுராபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சின்னராஜ் (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

துலுக்கம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, ரேகா அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை சின்னராஜ் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதையடுத்து ரேகா திருடன்... திருடன் என்று கூச்சலிட்டபடியே அவரை விரட்டிக்கொண்டு சென்றார். இதற்கிடையே மொபட்டில் எஸ்.நாங்குபட்டியில் உள்ள தனது உறவினர்கள் சிலருக்கு, ரேகா செல்போன் மூலம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.

திருடனுக்கு தர்ம அடி

இதையடுத்து துலுக்கம்பட்டி அருகே, அவனை மடக்கி பிடிக்க ரேகாவின் உறவினர்கள் உள்பட சிலர் காத்திருந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஆனந்த முத்துக்குமார் (47) என்பவர் சாலையின் குறுக்கே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சின்னராஜ், ஆனந்த முத்துக்குமார் மீது மோட்டார் சைக்கிளால் மோதினார். இதில் ஆனந்தமுத்துக்குமார் படுகாயமடைந்தார். நிலைதடுமாறி கீழே விழுந்த திருடன் சின்னராஜ் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மெக்கானிக் சாவு

இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த ஆனந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததிலும், பொதுமக்கள் தாக்கியதிலும் காயமடைந்த சின்னராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்ற பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆனந்த முத்துக்குமாருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்ற திருடனை பிடிக்க முயன்ற போது மெக்கானிக் மீது மோட்டார் சைக்கிளை மோதி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்