மழையால் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி தகவல்

மழையால் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Update: 2022-11-05 20:29 GMT


மழையால் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மழை பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர், சங்கீத்நகர், செல்லையா நகர், பல்லவி நகர், ஆபிசர்ஸ் டவுன், ஆர்.ஆர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இங்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி, மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தேன்.

நிரந்தர தீர்வு

இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மழைநீர், தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பாதாள சாக்கடை வசதியும், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி செல்வதற்கு தற்காலிகமாக சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலம் முடிந்த பின்னர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதிகளில் நிரந்தர தார்சாலை அமைப்பதற்கும், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.4 லட்சம் நிவாரண நிதி

வாடிப்பட்டி அருகே டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் காயம்பு (வயது 47) விவசாயி. இவர் கடந்த மாதம் 17-ந்தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வரும் வழியில் மஞ்சமலை கோவில் அருகே நொண்டிகோவில் ஓடையை கடக்கும் போது கனமழையின் காரணமாக ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டார். மறுநாள் அங்குள்ள சுடுகாடு அருகே உள்ள ஒடைக்கரையில் அவரது உடல் ஒதுங்கியது. கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று நேரில் சென்று காயாம்பு குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்