குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை
மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
அடிக்கடி வறட்சி
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆழ்துளை கிணறு தோண்டி குடிநீர் வழங்கிய நிலையில் நீர்மட்டம் அடி பாதாளத்திற்கு சென்று போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க தண்ணீர் ருசியும் மாறிவிட்டது. பின்னர் மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக மாவட்டத்தில் பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
விலைக்கு தண்ணீர்
மாவட்டம் முழுவதும் தாமிரபரணி குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தாமிரபரணி தண்ணீரின் சுவையை மாவட்ட மக்கள் இதுவரை சுவைத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே ஆங்காங்கே ஆழ்துளை கிணற்று தண்ணீருடன் தாமிரபரணி தண்ணீரை கலந்து தான் வினியோகிக்கிறார்கள். தாமிரபரணி தண்ணீர் திட்டத்தின் அளவுப்படி நமக்கு கிடைக்கிறதா என்று சந்தேகம் உள்ளது.
மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் என்று வேறுபாடு இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடத்தை தூக்கிக்கொண்டு அலைகின்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது. பெரும் பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை தான் உள்ளது.
நடவடிக்கை
எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தாமிரபரணி தண்ணீர் திட்டத்தில் சரியான அளவு கிடைக்கவும், அளவை அதிகரிக்கவும் தனியாக பிரித்து வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.