'ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை'-துணைத்தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் தகவல்
கீழக்கரை நகராட்சியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைத்தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் கூறினார்.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைத்தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் கூறினார்.
முதியோர் உதவித்தொகை
கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை அனைத்து கவுன்சிலர்களிடம் ஆய்வு செய்து நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கையாக முன்வைத்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நகர்மன்ற துணைத் தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் கூறியதாவது:-
தி.மு.க, மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.உத்தரவின் பேரில் கீழக்கரை தாலுகா பகுதியில் வசித்து வரும் முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று கீழக்கரை தாலுகா மூலம் இதுவரையிலும் 4 ஆயிரத்து 26 பேர் அரசு உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.மேலும் இது போன்ற பயனாளிகள் பயன்பெறும் வகையில் புதிதாக பதிவு செய்துள்ள தகுதியானவர்களை கண்டறிந்து விரைவில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
புதிய மேல்நிலைத்தொட்டி
மேலும் கீழக்கரை வடக்கு தெரு மணல்மேட்டில் அமைந்திருக்கும் 2 குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து கீழக்கரை நகர் முழுவதும் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 லட்சம் லிட்டர் வரை குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிகள் பழுதடைந்து உள்ளதால் அதை அகற்றி விட்டு ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கும் மேலும் அதேபோல் புதிதாக மற்றொரு இடத்தில் ரூ.1½ கோடி செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைப்பதற்கும் அறிக்கை தயார் செய்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்.
கூடுதல் டாக்டர்கள்
மேலும் கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று கீழக்கரை அரசு மருத்துவமனையை பார்வையிட வந்த சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இந்த பணிகள் கூடிய விரைவில் நடைபெறுவதற்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கூடிய விரைவில் அந்த பணிகள் தொடங்க உள்ளதாகவும். மேலும் பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான மீன் கடைகளில் உள்ள கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்து உள்ளதால் மீன் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.