"வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை"-கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்

“நெல்லையில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்று கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறினார்

Update: 2022-10-27 22:30 GMT

"நெல்லையில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என்று கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறினார்.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையரும், நெல்லை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா நெல்லைக்கு வந்துள்ளார். அவர் மழை நீர் வடிகால்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு தயார் செய்யப்படும் மேலப்பாளையம் மாநகராட்சி சமையல் கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டு உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, 2,246 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலப்பாளையத்தில் இதற்கான சமையல் கூடம் அமைக்கப்பட்டு, அங்கு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமையல் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மழை தண்ணீர்

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது நெல்லையில் மழை நீர் அதிகமாக உட்புகுந்தது. இந்த ஆண்டு அனைத்து வெள்ள நீர் கால்வாய்களும் தூர்வாரப்பட்டு மழை நீர் எளிதாக வடிந்து செல்வதற்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கால்வாய்கள், ஓடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்படுவதால் அடைப்பு ஏற்படுகிறது, கழிவுநீர் தேங்குகிறது.

தடுப்பு நடவடிக்கை

கடந்த முறை நெல்லை டவுன் பகுதிக்கு திருப்பணிகரிசல்குளத்தில் உள்ள உபரி நீர் அதிக அளவு வந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த முறை திருப்பணிகரிசல்குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்ற தனியாக கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. மேலும் டவுன் பகுதிக்குள் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் ஓடைகள் சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடும் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்படியாக திறக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்