பிரபல நடிகர்கள் கட்டிய வீடுகள் அளவீடு
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் பிரபல நடிகர்கள் கட்டிய வீடுகள் அளவீடு செய்யப்பட்டது. வனத்துறையினரும் ஆய்வு செய்தனர்.
பிரபல நடிகர்கள்
கொடைக்கானல் அருேக உள்ள வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் கொடைக்கானல் பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வீட்டுக்கு செல்லக்கூடிய பொதுப்பாதையை அரசிடம் உரிய அனுமதி பெறாமல் சிமெண்டு சாலை அமைத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கட்டிடங்கள் அளவீடு
இதன் எதிரொலியாக கொடைக்கானல் நகர நில அளவை துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பேத்துப்பாறை பகுதிக்கு சென்றனர். அங்கு நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கட்டியுள்ள வீட்டை அளவீடு செய்தனர்.
இதுதொடர்பான அறிக்கை வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் கூறுகையில், பிரபல நடிகர்கள் கட்டுகிற 2 கட்டிடங்களுக்கும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்று விரைவில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது என்றார்.
இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டியுள்ள வீட்டின் அருகே யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலை வனத்துறை சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.