பெரம்பலூர் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வேண்டும்

பெரம்பலூர் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-12-18 19:30 GMT

பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பாலக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் மாவட்ட செயலாளருமான கு.சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சியின் தலைமை கழக செயலாளராக துரை வைகோவை நியமனம் செய்த பொதுச் செயலாளர் வைகோவிற்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்சியில் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பெரம்பலூர்-அரியலூரை நிர்வாக காரணங்களுக்காக பிரித்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக ஜெயசீலனை நியமனம் செய்த வைகோவிற்கும், அதற்கு பரிந்துரை செய்த துரை வைகோ, சின்னப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு பெருமை சேர்ப்போம். பாசிச இந்துத்துவா சக்திகளின் சதிகளை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சி செய்கின்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கும் திட்டத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக கரூருக்கு ரெயில் போக்குவரத்து திட்டத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிக்காக பாடுபட வேண்டும். மேலும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்சியின் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்