கவுன்சிலர்கள் கூறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு
கவுன்சிலர்கள் கூறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர் பேசினார்கள். 92-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்கள் திலகர் பேசும்போது:-
எனது வார்டில் குடிநீர் வாரிய இடம், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்த இடங்களை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கிறிஸ்தவ கல்லறை பிரச்சினை பெரிதாக உள்ளது. அங்கு தனிநபர் ஒருவர் உடலை அடக்கம் செய்ய ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கிறார்.
இந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. சுடுகாட்டில் பிணத்தை புதைக்க, எரிக்க ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கேட்பதாக புகார் வருகிறது. விதிமுறை மீறி வீடுகள் கட்டப்பட்டு இல்லாத உரிமையாளர்களிடம் சிலர் பணம் கேட்கிறார்கள். இதேபோல் சாலையை வெட்டி கேபிள் போடுவதாக குடிநீர், மின்சார வாரிய அதிகாரிகள் எவ்வித தகவலும் இல்லாமல் ஈடுபடுகிறார்கள் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு மேயர் பிரியா பதிலளித்து கூறியதாவது:-
சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மண்டல அளவில் சரி செய்து முடிக்க வேண்டும். மன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது கவுன்சிலர்கள் கூறும் புகார்களை அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும். திரும்ப திரும்ப மன்றத்தில் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
ஆனால் ஒரு சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.
கூட்டத்தில் அடையார் காந்திநகர் கால்வாய்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவது, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 29 ஆயிரம் மாணவர்களுக்கு 4 வண்ண கலரில் டீ-சர்ட் வழங்குவது உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.