மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-11-16 18:45 GMT

திருவெண்காடு:

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

மழை பாதிப்புகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகள் கடந்த 11-ந்தேதி பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. விளைநிலங்கள், குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மின் கம்பங்கள், அதிக அளவில் சேதம் அடைந்தன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கொள்ளிடம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களான கொள்ளிடம், ஆச்சாள்புரம் நல்லூர், கொடக்காரமூலை, பழைய பாளையம், நல்லநாயகபுரம், ஆலங்காடு, வேட்டங்குடி, எடமணல் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

உணவு பொருட்கள் வழங்கினார்

முன்னதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்.ராதாநல்லூர் பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பா.ஜ.க. மாநில தலைவர்அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டம் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 74 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இந்த ஆண்டு மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.856 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.428 கோடியை மத்திய அரசு அண்மையில் விடுவித்தது.

ரூ.30 ஆயிரம் நிவாரணம்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது தமிழக அரசு தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய ரூ.1,000 நிவாரணம் போதுமானதாக இல்லை.

எனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்

பயிர்காப்பீடு பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கொண்ட பா.ஜ.க. குழுவினர் மழை பாதிப்புகளை கணக்கெடுத்து அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாய துறை மந்திரி தோமர் ஆகியோரை சந்தித்து மழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.மேலும் அவர்கள் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்த உள்ளனர். உடனடியாக தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்