தோழியுடன், கல்லூரி மாணவி மாயம்
திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாத நிலையில் கல்லூரி மாணவி, தனது தோழியுடன் திடீரென மாயமாகிவிட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி
திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாத நிலையில் கல்லூரி மாணவி, தனது தோழியுடன் திடீரென மாயமாகிவிட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 19 வயது பெண் அதேபகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு அவரது வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசிக்கு வந்து பெண் பார்த்து விட்டு சென்றார்.
இதை தொடர்ந்து தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கல்லூரி மாணவி, குடும்பத்தாரிடம் கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் கல்லூரி மாணவி, வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இளம் பெண்ணை பல இடங்களில் தேடினர்.
22 வயது பெண்
அப்போது மாயமான கல்லூரி மாணவி அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் சாட்சியாபுரத்தில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டு இருந்ததை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் 22 வயது பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுபகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செல்போன்
மாயமான 2 பெண்களில் ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் அடைந்த போலீசார் காணாமல் போன பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டு அவர் யார்? யாரிடம் பேசி உள்ளார். என்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையில் காணாமல் போன 2 இளம்பெண்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றி திரிந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் காணாமல் போன 2 இளம்பெண்களை தேடி வருகிறார்கள்.