"வாய்மொழி அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு வழங்கியதே அதிகபட்ச தண்டனை" ப.சிதம்பரம் பேட்டி

இந்திய குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 163 ஆண்டுகளில், வாய்மொழி அவதூறுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இதுவே முதல்முறை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-03 18:44 GMT

காரைக்குடி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததும் நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு கவலை அளிக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. இச்செயல் கடும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்பினை மோடி அரசு உருவாக்கி தந்திருக்கிறது.

மர்மம்

தண்டனையை நிறுத்தி வைத்த அறிவிப்பிற்கு பிறகும் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவு அவசரம் அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார்? என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.

ஜனாதிபதியோ, தேர்தல் ஆணையமோ அந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவு போட்டாரா? என்பது யாருக்கும் தெரியாது. இதுவே இன்றைய நிலை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதிகபட்ச தண்டனை

இந்திய குற்றவியல் சட்டம் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதுவரை 163 ஆண்டுகள் ஆகின்றன. 163 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கிற்காக அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் விதித்தது, நாங்கள் அறிந்தவரை இதுவே முதல்முறை. இந்நிகழ்வு மக்கள் மனதில் கேள்வியையும், ஒருவிதமான உறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது.

நீதித்துறையில் ஏற்பட்டு வரும் தலையீடுகளை, அதன் அபாயத்தை புரிந்து கொண்டு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் சட்ட மந்திரி கிரண்ரிஜிஜூ பகிரங்கமாகவே நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், எதிர்க்கட்சிகள் போல் பேசுகின்றனர்-எழுதுகின்றனர், என்கிறார்.

இது நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் விடப்பட்ட சவாலாகும். இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்