பகவதி அம்மன் கோவிலில் மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி சாமி தரிசனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார்.
தென்தாமரைகுளம்:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார்.
மொரிஷியஸ் ஜனாதிபதி
கன்னியாகுமரிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மொரிஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன் மற்றும் அவரது மனைவி சயுக்தா ரூபன் ஆகியோர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்களுடன் அந்த நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாதின் தாயார் சரோஜினியும் வந்திருந்தார்.
முதல் நாளில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்த அவர்கள் இரவில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கினர்.
2-வது நாளான நேற்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்று ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார்
சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து தனிப்படகில் பயணம் செய்து கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவர் ரசித்தார். அங்கு அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் தாணு வரவேற்றார். இதேபோல் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு சென்றும் பார்வையிட்ட அவர் கரைக்கு திரும்பினார்.
பின்னர் கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு காந்தி நினைவு மண்டபத்தை பார்வையிட்டார். 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்ததும் அவர் மதியம் 1.30 மணிக்கு கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன் படகு பயணத்தையொட்டி காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்கவும் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை.