கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மகத்திருவிழா

கரூரில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மகத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் தெப்பக்குளத்தை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-22 19:40 GMT

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்

கரூர் தாந்தோன்றி மலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

தெப்பத்திருவிழா

இந்தநிலையில் இந்த ஆண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வருகிற 26-ந் தேதி கொடி ஏற்றமும், மார்ச் மாதம் 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 8-ந் தேதி தெப்பத்தேர் சுற்றி வருதல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கோவிலின் எதிரே உள்ள தெப்பக்குளம் பாசிகள் படர்ந்தும், சில இடங்களில் செடிகள் முளைத்தும் உள்ளன. எனவே இந்த குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்து பாசிகளை அகற்றுவதுடன், குளத்து நீரை புதுப்பித்து அனைத்து பணிகளும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்