சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள சுங்க சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-09 17:18 GMT

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள சுங்க சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுங்கச்சாவடி அகற்ற போராட்டம்

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகின்றது. இதை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

போராட்டத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சுங்கச்சாவடியின் முன்பும், சுங்கச்சாவடியின் அலுவலகம் முன்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் தீபம் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுங்கச்சாவடி வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் முருகேஷ் அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து மாநில செயலாளா் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு சென்றனர்.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை

அங்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 20 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையில் தீபம் நகர் பஸ் நிறுத்தம் அருகில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுங்கச்சாவடி அலுவலகம் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்து உள்ளார் என்று கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்