மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-30 19:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்க கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலந்ததை கண்டித்தும், இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தீண்டாமை கொடுமைகளை வேர் அறுக்க வேண்டும், தீண்டாமையை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று கூறி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காவேரிநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தையே பரபரப்பாக்கியது. இந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அமைதியாக உள்ள இந்த கிராமத்தில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரோ சில சமூக விரோதிகள் தான் இந்த இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் இனிமேல் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடக்காமல் இருக்கவும் அமைதியை பேணி பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்று வேறு சில பகுதிகளிலும் இரட்டைக் குவளை முறை மற்றும் கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்காத சூழல் நிலவுவதாக தெரிய வருகிறது. அந்தப் பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இனிமேல் மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து சமூக மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.எஸ்.எஸ். காரர்களை போல தான் செயல்படுகிறார். தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்