மருதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பொக்க சமுத்திரம் கிராமத்தில் மருதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-05 16:28 GMT

பொக்க சமுத்திரம் கிராமத்தில் மருதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அருகே பொக்க சமுத்திரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கற்பகாம்பாள் சமேத மருதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி யாக சாலையில் குண்டம் அமைத்து கலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிவா அய்யர் தலைமையில் 10 சிவாச்சாரிகள் கலந்துகொண்டு விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், தத்துவார்ச்சனை பூஜை, நேற்று காலை யாக ஹோமம், மூல மந்திர ஹோமம், கால ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் மகா தீபாராதனையுடன் நடந்தது.

பின்னர் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஜெ.செல்வம் மற்றும் சிவதொண்டர்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி யாக சாலையில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக சென்று கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம்

பின்னர் கோவிலில் உள்ள கற்பகம்பாள், மருதீஸ்வரர், செல்வ விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, பைரவர், சண்டீஸ்கேஸ்வரர், கல்யாண நவக்கிரகம், ரத்தினகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, கஜலட்சுமி, நாகதேவதை உள்ளிட்ட பரிவார மூர்த்தி சாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், தீபாராதனையுடன் பூஜை நடந்தது.

கோவில் கோபுரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் நேரடியாக கோவில் வெளியே உள்ள கங்கா, யமுனா, கேதாவரி, காவேரி, சிந்து, சரஸ்வதி, வைகை பெயர்களில் வைக்கப்பட்டுள்ள தெய்வங்கள் முன்பாக வந்து சேர்ந்தது. அவ்வாறு வந்த புனிதநீரை பொதுமக்கள், பாத்திரம், பாட்டில்களில் பிடித்து வீட்டிற்கு எடுத்து சென்றனர். கோவிலை சுற்றி இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இரவில் கற்பகாம்பாள் சமேத மருதீஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் நாடகம் நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விழாவில் நாட்டேரி, பொக்க சமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஜெ.செல்வம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர், சிவ தொண்டர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்