காமராஜர் சிலை வைக்கக்கோரி தேசிய கொடியுடன் தியாகிகள் உண்ணாவிரதம்
சின்னாளப்பட்டியில், அகற்றப்பட்ட காமராஜர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி, தேசிய கொடியுடன் தியாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
காமராஜர் சிலை
சின்னாளப்பட்டி பஸ் நிலைய வளாகத்தில் கடந்த 1983-ம் ஆண்டு புத்தகப் பையை தூக்கிக்கொண்டு 2 குழந்தைகளை பள்ளிக்கு காமராஜர் அழைத்துச் செல்வது போல் 7 அடி உயர காமராஜர் சிலை நிறுவப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு பெய்த கன மழையின் போது அந்த சிலை சேதம் அடைந்தது. இதனால் சிலையை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.
இதைத்தொடர்ந்து மீண்டும் பஸ் நிலைய வளாகத்தில் அதே போன்ற காமராஜர் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எல்லை மொழிப்போர் தியாகிகள் சங்க மாநில தலைவருமான ராமு.ராமசாமி (வயது 91) தனது சொந்த செலவில் சிலை அமைப்பதற்கான 7 அடி உயர மேடை அமைத்தார்.
உண்ணாவிரதம்
அதில் காமராஜர் சிலையை நிறுவ சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக சிலை அமைப்பதற்காக கட்டப்பட்ட மேடை இடிக்கப்பட்டது. இதற்கிடையே சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ராமு.ராமசாமி அங்கு வந்தார்.
பின்னர் அவர் காமராஜர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கும் வரை தான் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக கூறி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டு போராட்டம் செய்தார். அவருடன் மொழிப்போர் தியாகி கோவிந்தசாமி, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் கந்தசாமி ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து தியாகிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, தியாகி ராமு. ராமசாமி கொடுத்த மனுவின் அடிப்படையில் சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.