திருவையாறு அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. இதுதொடர்பாக மணமகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு திருமணம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கிராம கோவிலில் நேற்று காலை குழந்தை திருமணம் நடப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. அதன் பேரில் சைல்டு லைன் அமைப்பினர், சமூக நலத்துறை திருவையாறு ஒன்றிய விரிவாக்க அலுவலர் லலிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததும், ஏற்கனவே இந்த சிறுமிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தபோது கடந்த ஜூலை மாதத்தில் அலுவலர்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்ததும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து சமூக நலத்துறை திருவையாறு ஒன்றிய விரிவாக்க அலுவலர் லலிதா திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் மெலட்டூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முனியப்பன் (31), சிறுமியின் தந்தை, தாய் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மணமகன் முனியப்பனையும், சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.