அரியலூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மர்மபெட்டி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரியலூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மர்மபெட்டியை அகற்ற வழி தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2022-08-20 18:25 GMT

சிரமம்

அரியலூர் மாவட்டத்தில் தலைநகராக விளங்கும் அரியலூரில் பஸ் நிலையம் எதிர்புறம் அரியலூர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் நிலையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1926-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் நகரின் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் தாலுகா அலுவலகத்தை கடந்து தான் வர வேண்டி உள்ளது.

தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதாலும், பல்வேறு பிரச்சினைகளுக்காக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் அவசர வேலையாக வெளியே செல்லும் போலீசார் தங்களது வாகனத்தை வெளியே எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே போலீஸ் நிலையத்திற்கு என தனி பாதை அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக போலீசார் கூறி வந்தனர்.

மர்மபெட்டி

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தீவிர முயற்சியினால் தற்போது போலீஸ் நிலையத்தில் எதிர்புறம் உள்ள சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு போலீஸ் நிலையத்திற்கென தனி நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் எதிர்புறம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வரும் பகுதியில் என்னவென்று தெரியாமல் மர்ம பெட்டி கம்பி வேலிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு இன்றி உள்ள இப்பெட்டி எந்தத்துறைக்கு சொந்தம், யார்? அமைத்தார்கள், எப்போது அமைத்தார்கள் என தெரிய வில்லை. இதனை அகற்றினால் தான் முழுமையாக பணிகள் நடைபெறும், பாதையும் அமையும். எனவே இதனை அகற்ற வேண்டும். நூற்றாண்டை நெருங்கும் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு புது வழி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்