திருப்பூர்:
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தெற்கு பிராந்திய பொறுப்பாளருமான சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூல் விலையில் இந்த மாதம் எந்தவித மாற்றமும், ஏற்றமும் இல்லை என்பது சற்று நிம்மதியையும், ஆறுதலையும் அளிக்கிறது. இதற்காக அனைத்து நூற்பாலை உரிமையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் கடந்த மார்ச் மாத விலைக்கு நூல் விலையை குறைக்கும் பட்சத்தில் ஆடை ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை செய்து முடிக்க உதவியாக இருக்கும். அனைத்து நூற்பாலை உரிமையாளர்களும் கடந்த ஏப்ரல், மே மாதம் உயர்த்தப்பட்ட கிலோவுக்கு ரூ.70 நூல் விலையை குறைக்க வேண்டும். கடந்த மார்ச் மாத நூல் விலையை தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.