மராட்டிய மாநில பெண் சிகிச்சையில் குணமடைந்தார்
புதுக்கோட்டை அருகே மனநல காப்பகத்தில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில பெண் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் இருந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
மராட்டிய மாநில பெண்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மருத்துவமனை வளாகம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சாா்பில் மனநல காப்பகம் இயங்கி வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னவாசலில் இருந்த மனநல காப்பகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அதில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது தெரிந்தது.
காப்பகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தான் மராட்டிய மாநிலம் ஜல்குவானை சேர்ந்த சல்மா (வயது 48) என்ற பெண். அவருக்கு இந்தி மட்டும் தெரிந்த நிலையில், தனது குடும்பம் பற்றி தெளிவாக தெரிவிக்க இயலவில்லை.
சமூக வலைத்தளம்
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரிடம் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரமிளா பேசி பழகி, சிகிச்சை அளித்து வந்தார். இதில் அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்தார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் சல்மாவின் புகைப்படத்தை பிரமிளா பகிர்ந்து, விவரத்தை தெரிவித்திருந்தார். இதனை வட மாநிலங்களில் இருந்தவர்கள் பார்த்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இதில் சல்மாவின் குடும்பத்தினருக்கு அந்த தகவலும் சென்றது. அவர்கள் பிரமிளாவை தொடர்பு கொண்டு பேசினர். மேலும் வீடியோ காலில் பேசி, சல்மாவை காண்பித்தார். இதில் அவர்கள் சல்மாவை உறுதிப்படுத்தினர்.
குடும்பத்தினர் மகிழ்ச்சி
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் சல்மா மாயமானதாகவும், இது தொடா்பாக அங்குள்ள போலீசில் புகார் அளித்ததாகவும், எங்கு தேடியும் கிடைக்காததால் இறந்து விட்டதாக கருதியதாக தெரிவித்தனர். இதையடுத்து உரிய ஆவணங்களுடன் சல்மாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் புதுக்கோட்டைக்கு வந்தனர். அவர்கள் சல்மா உயிருடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியில் கட்டித்தழுவினர்.
மேலும் சல்மாவும் மகிழ்ச்சியடைந்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ்மோகன் முன்னிலையில் சல்மா, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் நன்றி தெரிவித்து சல்மாவை அழைத்து சென்றனர். அவர் மீட்கப்பட காரணமாக இருந்த இறுதியாண்டு மாணவி பிரமிளாவுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செல்போனில் பேசி பாராட்டி வாழ்த்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வு வீடியோவை பதிவிட்டுள்ளார்.