மாப்பிள்ளையூரணியில்ரூ.55¼ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்:கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

மாப்பிள்ளையூரணியில் ரூ.55¼ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-01-22 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியில் ரூ.55¼ கோடி செலவில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

அடுக்குமாடி குடியிருப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், மாப்பிள்ளையூரணி வ.உ.சி. நகரில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 528 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.55 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ஆணையையும் அவர் வழங்கினார்.

கரிசல் இலக்கிய பூங்கா

தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் தனசேகரன் நகரில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் கரிசல் இலக்கிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு மரக்கன்றுகளை நட்டினார். சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாணவர் அணி முன்னாள் துணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான சரவணக்குமார், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மாவட்;ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்டஅவைத்தலைவர் அருணாச்சலம், நெல்லை கோட்ட செயற்பொறியாளர் சாந்தி, உதவி செயற்பொறியாளர் ராஜா கொம்பையா பாண்டியன், இளநிலை பொறியாளர் மணிகண்டன், தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் குறுக்குச்சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், நமது தமிழ்நாட்டு அரசின் செயல் திட்டங்களை ஒரு உரையாக வாசிப்பது கவர்னர் வேலை. அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பதவிக்கு வரவில்லை. ஜனாதிபதியை கூட நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஜனாதிபதி பார்த்து ஒருவரை கவர்னராக நியமிக்கிறார். அதனால் தான் ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என தொடர்ந்து கேட்கிறோம். இந்த கவர்னர் சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தி.மு.க. அரசு, முதல்-அமைச்சர் வழிக்காட்டுதலின் பேரில் எழுதிக் கொடுத்தை வாசிக்க வேண்டும். அதை விடுத்து அவர் சட்டமன்றத்தில் தன்னுடைய கருத்துக்களை உள்ளே புகுத்த நினைத்தபோது முதல்-அமைச்சர் எழுந்து கண்டனத்தை தெரிவித்தார். பொதுவாக சட்டமன்றத்தை விட்டு எதிர்க்கட்சி தான் வெளியேறும். ஆனால் கவர்னர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கி காட்டிய சுயமரியாதை சரித்திரம் நம்முடையது, என்றார்.

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஜெயக்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் முத்துக்குமார், சண்முகையா, ஒன்றிய இளைஞரணி ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் உட்பட கிளை கழகச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாயர்புரம்

சாயர்புரம் போப் கல்லூரி அருகே புதியதாக பஸ்நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி, சாயர்புரம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பிரபா, துணைத் தலைவர் பிரியாமேரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சாயர்புரம் போப் கல்லூரி தாளாளர் கிப்ட்சன், கல்லூரி முதல்வர் இம்மானுவேல், போப் பொறியியல் கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்