மஞ்சள் அறுவடை மும்முரம்

Update: 2023-04-26 16:07 GMT


நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள மஞ்சள் விளைந்து விட்டதால் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மஞ்சள் சாகுபடி

நத்தக்காடையூர் நகரம், பழையகோட்டை, மருதுறை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், பரஞ்சேர்வழி பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை உள்ளது.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் சாகுபடி நடைபெற்று வருகிறது.

மேலும் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர், குளம், ஓடை பாசன நீர் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி சாகுபடியும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நத்தக்காடையூர் பகுதிகளில் 1000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மஞ்சள் அறுவடை 2 வார காலமாக நடைபெற்று வருகிறது.

மஞ்சள் தரம் பிரிப்பு

இதனை தொடர்ந்து மஞ்சள் கிழங்குகள் டிராக்டர் மூலம் ஏற்றி விவசாயிகள் தோட்ட களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கலன்கள் மூலம் அடுப்பில் வேக வைத்து வெயிலில் நன்கு காய வைத்து தனி விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என தரம் பிரிக்கிறார்கள். பின்னர் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். மேலும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தினந்தோறும் 1400 மூட்டைகள் வரை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தற்போது ஒரு குவிண்டால் தனி விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 500-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 50-க்கும், தனி கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 740-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்