மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டம், பொன்னிவாடி பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 52) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அங்கமாக செயல்படும் பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட தலைவராக செயல்பட்டு வருகிறேன். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் செப்டம்பர் 17-ந் தேதி அன்று திருச்சி திருவரங்கத்தில் மனுதர்ம வேத இதிகாச எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனால் கடவுள் நம்பிக்கை உள்ளோர், கடவுள் நம்பிக்கை அற்றவர் என இரு குழுக்களுக்கு இடையே பிரச்சினையும், இந்துக்களின் மத நம்பிக்கையை அசிங்கப்படுத்தி, மத பிரச்சினையை தூண்டும் சூழல் உள்ளது. கம்பராமாயணம், வில்லிபாரதம், வால்மீகி ராமாயணம், வியாசபாரதம் போன்றவை தமிழர் வாழ்வியல் மரபின் அடையாளங்கள். அவற்றை எரிப்பது ஒட்டு மொத்த தமிழர் மற்றும் இந்து விரோத, சட்டவிரோத நடவடிக்கை ஆகும். எனவே மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொது அமைதியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.