பூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு

எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்றதாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-02 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்றதாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் உள்ள செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பெண்கள் உலக நன்மைக்காக குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் ஆரத்திகுடம், பால்குடம், பூத்தட்டு ஏந்தி வந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தும், கலர் பொடி உடம்பில் ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டு பேத்தப்பன் விரட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று கோவில் முன்பாக உள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு

முன்னதாக கோவில் காளைக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடியது. இதில் 15-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாக மணலூர் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் கட்டுகுடிபட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன், செல்வம், மற்றொரு செல்வம், சந்திரசேகர், செந்தில்குமார், முத்துராமலிங்கம் ஆகிய 6 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்