தண்ணீர் இன்றி கருகும் மணிலா பயிர்கள்
வாணாபுரம் பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் மணிலா பயிர்கள்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வாணாபுரம்
வாணாபுரம் மற்றும் தச்சம்பட்டு, வெறையூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், வாழவச்சனூர், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, தச்சம்பட்டு, கல்லேரி, நவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மணிலா, கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
நீர்நிலை பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீருக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் மழையை எதிர்நோக்கி பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்ட மணிலா பயிர்கள் தற்போது செழித்து வந்த நிலையில் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பெரும்பாலும் கிணற்று தண்ணீரை பயன்படுத்தியே அதிகளவில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது கிணற்றில் தண்ணீர் இருந்தும் விவசாய பயிர்களுக்கு போதுமானதாக இல்லை.
எவ்வளவு தான் கிணற்றில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தினாலும் மழை பெய்தால் மட்டுமே பயிர்கள் நன்றாக செழித்து வளரும்.
இப்பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாத காரணத்தினால் மணிலா, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகிறது.
மேலும் பயிரிடுவதற்கு செலவு செய்யப்பட்ட தொகையாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.