ஆவடி ரெயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நின்று செல்லும் - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்

ஆவடி ரெயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நிறுத்த சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;

Update: 2022-08-22 11:49 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை-மங்களூரு அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. பின்னர் மங்களூருவில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடைகிறது.

இந்த அதிவிரைவு ரெயில் 6 மாத காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆவடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் மங்களூரு அதிவிரைவு ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் மாலை 4.48 மணி முதல் 4.48 மணிவரையும், இதேபோல் மங்களூருவில் மாலை 4.55 மணிக்கு புறப்படும் இந்த அதிவிரைவு ரெயில் மறுநாள் காலை 6.58 மணி முதல் 7 மணிவரை ஆவடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆவடியில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நின்று செல்லும் நிகழ்ச்சி நேற்று காலை ஆவடி ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி வி.முரளிதரன், தகவல் ஒளிபரப்பு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரெயில் நிறுத்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், சென்னை டிவிஷன் ரெயில்வே மேலாளர் கணேஷ், உதவி மேலாளர்கள் சச்சின் புனிதா, ஆனந்த் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்