மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
மழை மற்றும் புயல் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து கிளம்பக்கூடிய மற்றும் சென்னைக்கு வரக்கூடிய பல்வேறு மின்சார ரெயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி புயல் மற்றும் மின்சார கோளாறு காரணமாக ரெயில்களின் வருகை தாமதமாகி உள்ளது.
குறிப்பாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய ரெயில் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் அந்த ரெயிலில் இன்று கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
அதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய மின்சார ரெயில்களும் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் புயல் காரணமாக மின்சார ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரெயில் ஏறிச் செல்கின்றனர்.