பேளுக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்

பேளுக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்

Update: 2022-06-30 16:46 GMT

சேந்தமங்கலம்:

பேளுக்குறிச்சி அருகே சிங்களாந்தபுரம் ஏரிக்கரை பகுதி பஸ் நிறுத்தத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணம் கிடப்பதாக பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் வாகனம் மோதி இறந்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் அளித்த தகவல்படி இறந்தவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து பேளுக்குறிச்சி போலீசார் தர்மபுரி மாவட்ட போலீசாரின் வாட்ஸ்-அப் குழுவிற்கு இறந்தவர் குறித்த தகவலை தெரியப்படுத்தினர். இதன் மூலம் இறந்தவரின் விவரம் தெரியவந்துள்ளது. அதாவது, இறந்து கிடந்தவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் (வயது 33) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் சம்பவத்தன்று சிங்களாந்தபுரத்திற்கு வந்தபோது வாகனம் மோதி இறந்துள்ளார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்தரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அவரது மனைவி விஜி மற்றும் குடும்பத்தினர் வந்து இறந்து கிடந்தவர் செல்வம் தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்