ஆட்டோ டிரைவர் உருட்டு கட்டையால் அடித்துக்கொலை; வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே ஆட்டோ டிரைவரை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-11 05:01 GMT

ஆட்டோ டிரைவர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ்வாணன் மகன் அஜித்குமார் (வயது 29), கொளஞ்சி மகன் சிவா (20), பன்னீர்செல்வம் மகன் முத்துப்பாண்டி (29). இதில் அஜித்குமார், முத்துப்பாண்டி ஆகியோர் ஆட்டோ டிரைவர்களாகவும், சிவா சரக்கு வாகன டிரைவராகவும் பணிபுரிந்து வந்தனர்.

அஜித்குமாரின் மாமன் மகளை சிவா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் சிவாவுக்கு தங்கை முறையாகும் என்று கூறப்படுகிறது.

தகராறு

முத்துப்பாண்டி அதே பகுதியில் நூர்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் 2 பேரும் ஒரே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நூர்திகா, சிவா குடும்பத்தாரிடம் சென்று அஜித்குமாரின் மாமன் மகளை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள் நூர்திகாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த முத்துப்பாண்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சிவாவின் வீட்டிற்கு சென்று தனது மனைவி பற்றி அவதூறாக பேசியது குறித்து தட்டி கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

உருட்டு கட்டையால் தாக்குதல்

இதைக்கேள்விப்பட்ட அஜித்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிவா அருகே இருந்த உருட்டு கட்டையால் முத்துப்பாண்டி மற்றும் அஜித்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் மயங்கி கீழே விழுந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அஜித்குமாரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமாரின் உறவினர்கள் சிவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், இன்ஸ்பெக்டர்கள் சுமதி, சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிவாவை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் சிவா தாக்கி படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி தழுதாழைமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் படுத்து கிடந்தார். அவரை போலீசார் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த அஜித்குமாருக்கு செந்தமிழ் செல்வி (23) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்