காரியாபட்டி
நரிக்குடி அருகே உள்ள சொட்டமுறி பஸ் நிறுத்தத்தில் கடந்த 17-ந் தேதி காலை பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த அங்காள பரமேஸ்வரி என்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மர்ம நபர்கள் 5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அங்காள பரமேஸ்வரி நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நகையை பறித்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் நகரை சேர்ந்த அரவிந்த்குமார் (20) என்பரை போலீசார் கைது செய்தனர். இந்த நகை பறிப்பு சம்மந்தமாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.