பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருடியவர் கைது
கோத்தகிரியில் பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி
கோத்தகிரி சேட்லைன் பகுதியில் வசிப்பவர் பூங்கொடி (வயது 57). குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர். இவரது மகளுக்கு குழந்தை பிறந்து உள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் 1-ந் தேதி ஈரோடு சென்றார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், ஜார்ஜ், பப்பிலா ஜாஸ்மின், யாதவ கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அரவேனு பகுதியில் சந்தேகப்படும் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (41) என்பதும், பூட்டிய வீட்டில் நகைகளை திருடி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு திருப்பூர் சென்றதும், நகைகளை எடுக்க வந்த போது போலீசிடம் சிக்கியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து முத்துவேலை அரசு மேல்நிலைப் பள்ளிகக்கு அழைத்து சென்று, அங்கு புதைத்து வைக்கப்பட்ட நகைகளை மீட்டனர். முத்துவேல் மீது கோத்தகிரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.