திருவொற்றியூரில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
திருவொற்றியூரில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து கார்கில் நகர் வழியாக மணலி செல்லும் மாநகர பஸ்சை (தடம் எண் 56) நேற்று முன்தினம் இரவு டிரைவர் சுகந்தராஜன் ஓட்டிச்சென்றார். திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் இறக்கத்தில் பஸ் சென்றபோது, திடீரென அங்கு குடிபோதையில் ஒருவர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் திடீரென கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்து கொண்டு கீழே இறங்கினர்.
இதுபற்றி டிரைவர் சுகந்தராஜன் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.