திருத்துறைப்பூண்டி டாக்டர் வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் பிடிபட்டார்

திருத்துறைப்பூண்டி டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 7 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-24 19:00 GMT

திருத்துறைப்பூண்டி டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 7 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

டாக்டர் வீட்டில் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரபல குழந்தைகள் நல டாக்டர் பிரேம்குமார் தாமஸ். கடந்த மாதம் (மே) 13-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், காமராஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். திருத்துறைப்பூண்டி நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒருவர் பிடிபட்டார்

இதே கொள்ளை வழக்கில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ் (வயது30) என்பவரை திருத்துறைப்பூண்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவரை விழுப்புரம் போலீசார் அந்த பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது, திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நிர்மல்ராஜை திருத்துறைப்பூண்டி போலீசார் விழுப்புரத்தில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர மோதிரம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வேறு எந்த கொள்ளைகளில் தொடர்பு உள்ளது? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்