தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
சென்னை,
மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்காள பொறுப்பு கவர்னருமான இல.கணேசன் இல்ல விழா, இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சென்னை வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு மாலை 5.37 மணிக்கு சென்றார். அவரை வீட்டு வாசலுக்கே வந்து மு.க.ஸ்டாலின் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் மம்தா பானர்ஜிக்கு, மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காபி அருந்தியபடி உரையாடினர்.
25 நிமிடங்கள் உரையாடல்
இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு பரிசு பொருட்களை வழங்கினார். முதல்-அமைச்சர் தனது சார்பில் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பு மாலை 6.05 மணி வரை சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் இருந்து வெளியேறும்போது மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மம்தா பானர்ஜி மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பலமுறை சென்னைக்கு வந்துள்ளார். கருணாநிதி உருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் திறந்து வைத்தது தி.மு.க.வையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்தியது.
என்னை மரியாதை நிமித்தமாகவே அவர் சந்தித்தார். நீங்கள் அவசியம் மேற்கு வங்காளத்துக்கு விருந்தினராக வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் பற்றியோ, அரசியல் பற்றியோ எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எனது சகோதரர்
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நிருபர்களிடம் பேசும்போது, 'மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். தனிப்பட்ட முறையில், மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு குறித்து முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் சென்னைக்கு வந்த பின்பு மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும்? மு.க.ஸ்டாலினை சந்திப்பது எனது கடமை' என்றார்.
இதன்பின்பு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மம்தா பானர்ஜி அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- இந்த சந்திப்பு விரைவில் அரசியல் சந்திப்பாக நீடிக்குமா?
பதில்:- இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசத்தான் செய்வார்கள். அரசியல் இல்லாமலும் இருக்கலாம். மேம்பாட்டு பணிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையாகவும் இருக்கலாம். அரசியலை விட மேம்பாடு சிறந்ததாக உள்ளது.
விமர்சிக்க விரும்பவில்லை
கேள்வி:-தமிழகத்திலும், மேற்குவங்காளத்திலும் கவர்னர்கள் தொடர்பான சில பிரச்சினைகள் உள்ளன. அது சம்பந்தமாக இந்த சந்திப்பின்போது எதுவும் பேசப்பட்டதா?
பதில்:- இல்லை. அதைப்பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது தனிப்பட்ட, மரியாதை நிமித்தமான, சகோதரர்-சகோதரி என்ற அடிப்படையிலான எங்களுக்கு இடையேயான உறவின் நிமித்தமான சந்திப்பு தான். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா அல்லது சமூக ரீதியான சந்திப்பா அல்லது கலாசார ரீதியான சந்திப்பா என்பதை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
கேள்வி:- ராகுல் காந்தி நடைபயணம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- எந்த அரசியல் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சிக்க விரும்பவில்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி பதிலளித்தார்.