குமாரபாளையம்
குமாரபாளையம் காட்டூர் விட்டலபுரி பகுதியில் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் குமாரபாளையம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் அந்த பகுதி பொது மக்களிடம் விசாரணை செய்தபோது, அந்த வீட்டிற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் குடிவந்தனர். அந்த ஆண் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவரது மனைவி வெளியூர் சென்று விட்டதாகவும் தெரிகிறது. மேலும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வாலிபரிடம் அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினர். அதற்கு அவர் நான் காலையில் போகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார். இதையடுத்து அந்த வீட்டில் இருந்து உடல் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அருகில் இருந்தவா்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.