சென்னை விமான நிலையத்தில் தாலியை கழற்ற சொன்னார்கள்; சமூக வலைதளத்தில் மலேசிய பெண் புகார்

சென்னை விமான நிலையத்தில் தாலியை கழற்ற சொன்னதாக மலேசிய பெண் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு உள்ளார்.

Update: 2023-07-25 05:37 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்தபோது, அங்கிருந்த சுங்க இலாகா அதிகாரிகள், "நீங்கள் இந்திய சுங்க விதிகளின்படி இல்லாமல் கூடுதல் நகைகளை அணிந்து வந்து உள்ளீர்கள். அவற்றை கழற்றி தாருங்கள்" என்றனர்.

அதற்கு அந்த பெண், "நான் தாலி அணிந்து இருக்கிறேன். அவற்றை கழற்றி தரமுடியாது" என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவருடைய கணவரின் நகைகளை வாங்கி கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவர்கள் மலேசியாவுக்கு திரும்பி செல்லும் போது நகைகளை வாங்கி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண், சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில், "கணவருடன் மலேசியாவில் இருந்து திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோவில்களுக்கு செல்ல சென்னை வந்தேன்.

சென்னை விமான நிலையத்தில் 2½ மணி நேரம் சுங்க இலாகா அதிகாரிகள் எங்களை அலைக்கழித்தனர். கழுத்தில் அணிந்து இருந்த தாலியை கழற்ற சொன்னார்கள். நான் வாக்குவாதம் செய்ததால் கணவரின் நகைகளை வாங்கி கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வரவேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது" என அந்த வீடியோவில் கூறி இருந்தார். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கூறும்போது, "சுங்க விதிகளின்படி அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை தரவேண்டும். அது இல்லாததால் கூடுதலான நகைகளை வாங்கி வைத்து கொண்டு, திரும்பி செல்லும் போது வாங்கி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்