மலையனூர் செக்கடி ஊராட்சி உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்
மலையனூர் செக்கடி ஊராட்சி உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு
மலையனூர் செக்கடி ஊராட்சி உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டை அடுத்த மலையனூர் செக்கடி ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கூட்டாறு, அண்ணா நகர், மேட்டுப்பாளையம், நடேசன் கொட்டாய், மல்காப்பூர், விருப்பாச்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.
9 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் நேற்று 6 வார்டு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் கூறியதாவது:-
ஊராட்சி மன்ற தலைவருடைய கணவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க சொன்னால் திறக்க முடியாது என்று கூறுகிறார். மாதந்தோறும் ஊராட்சி கூட்டம் நடத்துவது கிடையாது. தீர்மான புத்தகத்தில் எங்களிடம் கையெழுத்து வாங்குவதும் கிடையாது. எங்கள் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் இருந்து ஒவ்வொருவரிடமும் 100 ரூபாய் பெறுகிறார்கள். பணித்தள பொறுப்பாளரை மாற்ற வேண்டும் என கூறினர்.
ஒரு மணி நேரம் காத்திருப்பு போராட்டத்துக்கு பின்னர் தண்டராம்பட்டு ஊராட்சி ஒனறிய அலுவலகத்துக்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.