உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறுவதா? அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதாக அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Update: 2023-04-19 23:45 GMT

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து பட்டியல் என வீடியோ வெளியிட்டார்.

அதில், ஒவ்வொருவருக்கும் பல கோடி சொத்துகள் உள்ளதாக கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் அதன் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தி.மு.க. மூத்த வக்கீலும், எம்.பி.யுமான வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

உதயநிதி ஸ்டாலின் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். அவர் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவந்தார். உதயநிதி ஸ்டாலினின் கடின உழைப்பு, திறமை மற்றும் தொழில் மீதான அர்ப்பணிப்பு போன்றவற்றால் இந்த நிறுவனம் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவருகிறது. பொதுப்பணி மற்றும் கட்சிப்பணி காரணமாக இந்த நிறுவனத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகிவிட்டார்.

எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் அவர் செய்துவரும் பணி தேசிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. தொகுதி மக்களின் நலனுக்காக அவர் இரவு பகலாக உழைத்து வருகிறார். இதனால் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயர் உள்ளது.

அரசியல் லாபத்துக்காக...

இந்தநிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2 ஆயிரத்து 39 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள்.

நீங்கள் (அண்ணாமலை) வெளியிட்டுள்ள வீடியோவில் எந்த காரணமும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினின் மைனர் மகள் உள்ளிட்ட இரு குழந்தைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அவர்களின் பெயர்களை வீடியோவில் சேர்த்தது உதயநிதி ஸ்டாலினின் தனி உரிமையை மீறுவதாகும். அரசியல் லாபத்துக்காக இதுபோன்று செயல்பட்டுள்ளீர்கள்.

அடிப்படை ஆதாரமற்றது

உதயநிதி ஸ்டாலின் தனக்கு இருந்துவரும் ரூ.29 கோடி சொத்து விவரங்களை 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அப்படி இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2 ஆயிரத்து 39 கோடி சொத்துகள் இருப்பதாக தாங்கள் தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய நிலையில் இந்த நிறுவனத்தின் சொத்துகள் உதயநிதி ஸ்டாலின் சொத்துகள் என கூறுவது தவறானது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி என்பது கற்பனையானது.

உதயநிதி ஸ்டாலின் பங்குதாரராக இருந்தபோது இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.30 கோடிதான். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் சொத்துகள் சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்டவை அல்ல.

இந்த நிறுவனத்தின் வரவு-செலவு விவரங்கள் வருமான வரி அலுவலகத்தில் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெளியேறிவிட்டார்

நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் இயக்குனராக உள்ளார் என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இந்த நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் இயக்குனராக இல்லை. நோபல் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து 2010-ம் ஆண்டிலேயே உதயநிதி ஸ்டாலின் வெளியேறிவிட்டார்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான உங்களால் இந்த இரு நிறுவனங்களின் பெயர்களை வேறுபடுத்தி பார்க்கமுடியாததை அறியாமை என கூற முடியாது. நீங்கள் வேண்டுமென்றே அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளீர்கள்.

துபாய் பயணத்தின்போது முதல்-அமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்குதாரராகவோ, இயக்குனராகவோ இல்லாதபோது அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டை எப்படி கூற முடியும்?

நிபந்தனையற்ற மன்னிப்பு

பொதுவாழ்வில் இருக்கும் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும என நீதிமன்றங்கள் கூறுகின்றன. தாங்கள் உண்மைத்தன்மையை ஆராயாமல் வேண்டுமென்றே அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள்.

உதயநிதி ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் தங்கள் மீது அவதூறு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும்.

பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய தாங்கள் இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரூ.50 கோடி இழப்பீடு

பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கூடிய வீடியோவை தங்களது முகநூல் பக்கம் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ரூ.50 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்