பேரையூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்

பேரையூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-01-08 21:38 GMT

பேரையூர்

பேரையூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அறுவடை பணி

பேரையூர் பகுதியில் கடந்த ஆவணி மாதம் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். பேரையூர் தாலுகாவில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கர் ஒன்றுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது 120 முதல் 140 நாள் பயிராக மக்காச்சோளம் வளர்ந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

50 சதவீத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் கிடைத்து வருகிறது. மீதமுள்ள விவசாயிகளுக்கு 8 முதல் 10 குவிண்டால்களே கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் மக்காச்சோளம் 70 நாள் பயிராக இருக்கும்போது அடிக்கடி மழை பெய்ததால் மக்காச்சோள கதிரின் வளர்ச்சி சுருங்கியது. இதனால் அதிக மகசூல் கிடைக்க வேண்டிய மக்காச்சோளம் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. மேலும் மக்காச்சோள கதிர் பரிந்த நிலையில் படைப்புழு தாக்குதலானாலும் மகசூல் குறைந்த அளவு கிடைத்துள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

விளைச்சல் குறைவு

தற்போது மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2150 முதல் 2200 வரை விலை போகிறது. இந்த வருடம் மக்காச்சோள சாகுபடி வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆவணி மாதத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மக்காச்சோள கதிர் பரிந்த நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் மழை இல்லாததாலும், அதன் பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததாலும், படைப்புழு தாக்குதலாலும், மக்காச்சோளத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஓரளவுக்காவது விவசாயிகள் லாபம் அடைய முடியும் என்று கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்