மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-08-07 17:39 GMT

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, தென்னை, வாழை மற்றும் காய்கறிப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதுதவிர மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக்காலங்களில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர இறவைப் பாசனம் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மக்காச்சோளத்துக்கு கடந்த சில நாட்களாக சீரான விலை கிடைத்து வருவது குறித்து விவசாயிகள் கூறியதாவது

படைப்புழுக்கள்

'மக்காச்சோள சாகுபடியைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக படைப்புழுக்கள் தாக்குதல் பெரிய அளவில் உள்ளது. எனவே படைப்புழுக்கள் கட்டுப்பாட்டுக்கென பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் உரம், ஆள் கூலி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்திச்செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கான தேவை உள்ளது. ஆனாலும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்வதால் உள்ளூரில் போதிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்தநிலையில் பிற மாநிலங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டு மக்காச்சோள வரத்து குறைந்துள்ளது. அத்துடன் தமிழகத்திலும் மக்காச்சோள சாகுபடி குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கடந்த காலங்களில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1,800-க்கும் குறைவாகவே விற்பனையான நிலையில், தற்போது ரூ.2,300-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இ-நாம் எனப்படும் மின்னணு வேளாண் சந்தை மூலம் இந்தியா முழுவதும் உள்ள வணிகர்களிடம் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடிகிறது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைப்பில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகிறது. தென்மேற்குப்பருவமழை தொடங்கி, மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி, அறுவடைக்காலம் வரை வரத்து குறைவாகவே இருக்கும். எனவே இன்னும் சில மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்று நம்பியுள்ளோம்' என்று விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்