கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை முன்னிட்டு கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2023-06-03 19:21 GMT

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை முன்னிட்டு கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கல்லணைக்கால்வாய்

காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் வேளாண் பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணைக்கால்வாய் ஆகும். தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கல்லணைக் கால்வாய் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கல்லணைக் கால்வாயின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினை முறையாக திட்டமிடப்பட்டு சரியாக பயன்படுத்தி தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் வழங்குவதற்காக கல்லணைக் கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் புனரமைத்தல் திட்டம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டது.

மோடி தொடங்கி வைத்தார்

இதையொட்டி திறன்மிக்க நீர் மேலாண்மைக்காக திட்டமிடப்பட்ட திட்டத்தை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.2,639 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் கல்லணைக் கால்வாயில் இருந்து பெறப்படும் நீர் 62 சதவீதம் அளவிற்கு பயன்படும் வகையில் தண்ணீர் கொள்ளளவு உயர்த்தப்பட உள்ளது.

மதகுகள்- கால்வாய் பாலங்கள்

திட்டத்தின் கீழ் பல்வேறு மதகுகள், கால்வாய் பாலங்கள் கீழ் குமிழி அமைப்பு, நீரொழுங்கிகள், கல்லணைக் கால்வாயில் நீரோடும் பாதையில் படுக்கை தளம் அமைத்தல், கால்வாயில் கரை பகுதியில் சாய் தளம் கான்கிரீட் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. நடப்பு ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னர் கல்லணைக் கால்வாயில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன.

நவீன எந்திரங்கள்

கல்லணைக் கால்வாயில் இரு கரைகளிலும் சாய்வு தளம் அமைக்கும் பணிகளுக்காக ராட்சச பொக்லின் எந்திரங்கள் மூலம் கரைகளை சமப்படுத்தி, நவீன எந்திரங்கள் கொண்டு சிமெண்டு கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு சாய்வுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய கிளை வாய்க்கால் தலைப்பு முழுவதும் இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

கல்லணைக் கால்வாயில் சோளகம்பட்டி கிராமத்திற்கு செல்ல சிறிய பழைய பாலத்தினை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டு பாலத்தின் தாங்கும் திறனை சோதனை செய்ய மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பாலம் கட்டி முடிக்க இயலாத நிலையில் பழைய பாலத்தினை இடிக்காமல் அதன் அருகில் புதிய பாலம் கட்ட தொடங்கி இருந்தால் அந்த பாலம் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.

தண்ணீர் திறக்க வாய்ப்பு

பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டி முடிக்கப்படாத சூழ்நிலையில் சோளகம்பட்டி கிராம மக்கள் பூதலூர், மாரநேரி வருவதற்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் பொன்விளைந்தான்பட்டி கிராமத்திற்கு செல்ல கடந்த ஆண்டு தொடங்கிய பாலம் கட்டும் பணி எந்த முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது என்று அந்த கிராமத்தினர் கவலை தெரிவிக்கிறார்கள்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்