முக்கிய சாலைகள் வெறிச்சோடின: ஆலங்குடியில் களையிழந்த தீபாவளி வியாபாரம்

முக்கிய சாலைகள் வெறிச்சோடியதால் ஆலங்குடியில் தீபாவளி வியாபாரம் களையிழந்தது.

Update: 2022-10-22 19:34 GMT

ஆலங்குடியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடலை மில்களும், நெல் அரவை மில்களும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு கூலி வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவில் வியாபாரம் நடைபெறும் எனக்கருதி மளிகை, ஜவுளி, பட்டாசு வியாபாரிகள் அதிகளவில் முதலீடு செய்து பொருட்களை இறக்குமதி செய்து இருந்தனர். ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும், எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடைகளில் பொருட்களை வாங்க ஆட்கள் யாருமின்றி வியாபாரிகள் வழி மேல் விழி வைத்து காத்துள்ளனர்.

தீபாவளி வியாபாரம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்தவர்கள் எவ்வாறு பணத்தை திருப்பிக் கொடுப்பது என்று கலக்கமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின்போது அதிகளவில் வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு வியாபாரம் இல்லாமல் போனதால் காரணம் புரியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். தீபாவளிக்கு மற்ற இடங்களில் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் ஆலங்குடியில் மட்டும் வழக்கத்தை விட வியாபாரம் குறைந்துள்ளது அப்பகுதி வியாபாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்